சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை


சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை
x
தினத்தந்தி 3 July 2020 12:20 AM GMT (Updated: 3 July 2020 12:20 AM GMT)

ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

ஹாங்காங்,

இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, ஹாங்காங்கை சீனா வசம் இங்கிலாந்து ஒப்படைத்தது. அப்போது ஹாங்காங்கின் சுயாட்சிக்கு சீனா தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது ஹாங்காங்கின் சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்துகிற விதத்தில் புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், ஹாங்காங் மீது சீனாவுக்கு புதிய அதிகாரங்களை தருகிறது. இது போராட்டங்களை, பேச்சுரிமையை ஒடுக்கும்.

இந்த சட்டம் குறித்து கடந்த மே மாதம் சீனா அறிவித்தபோதே ஹாங்காங்கில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் அமைதியின்மையையும், உறுதியற்ற தன்மையையும் சமாளிக்க இது தேவை என்று சீனா கூறியது.

இந்த சட்டத்துக்கு உலகத்தலைவர்கள் பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தபோதும், சீனா அதை நிராகரித்து இந்த சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்தி உள்ளது.

இதன்மூலம் ஹாங்காங்கில் சீனா, புதிய தேசிய பாதகாப்பு அலுவலகத்தை ஏற்படுத்தும். இதுதான் தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை கவனிக்கும். ஹாங்காங் பள்ளிகளில் தேசிய பாதுகாப்பு கல்வியை மேற்பார்வையிடுவது போன்ற அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.

சீனா நியமிக்கும் ஆலோசகருடன் சட்டங்களை செயல்படுத்துவதற்கு தனது சொந்த தேசிய பாதுகாப்பு கமிஷனை ஹாங்காங் நிறுவும்.

தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கையில் இருக்கும். இது நீதித்துறையின் சுதந்திரம் மீது அச்சங்களை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில் இங்கிலாந்து ஆட்சி ஹாங்காங்கில் முடிவுக்கு வந்தபோது 50 ஆண்டுகளாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களை இந்த சட்டம் முடிவுக்கு கொண்டு வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இந்த சட்டம் ஹாங்காங் மக்களுக்கு எதிரான ஒரு மிருகத்தனமான ஒடுக்குமுறை. இது அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட சுதந்திரங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது” என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், “இது 1985-ம் ஆண்டு போடப்பட்ட சீன, பிரிட்டிஷ் கூட்டு பிரகடனத்தை தெளிவாக, தீவிரமாக மீறிய செயல்” என விமர்சித்தார்.

இந்த சட்டத்தை ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சில மணி நேரத்தில் அங்கு கைது நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

சுதந்திர சார்பு கொடியுடன் போராட்டம் நடத்திய ஒருவர் உள்பட 10 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தடையை மீறி பேரணி சென்றதாக 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமானது, சீனாவின் ஜின்பிங் அரசு மற்றும் ஹாங்காங்கின் பிராந்திய அரசு மீது வெறுப்பை தூண்டினால் அது குற்றம் என கூறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹாங்காங் விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இந்த மசோதா அங்கு ஒரு மனதாக நிறைவேறியது.

அடுத்த கட்டமாக நாடாளுமன்ற செனட் சபையில் நிறைவேற வேண்டும். அங்கு நிறைவேறிய உடன் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்ட உடனேயே அமலுக்கு வரும்.

இந்த பொருளாதார தடை சட்டமானது, ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்துள்ளது.

இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story