உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 3 July 2020 1:10 AM GMT (Updated: 3 July 2020 1:10 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவில் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், மீண்டும் எப்போது 2 வது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவிக்கொண்டே இருக்கிறது.

இப்படி உலக நாடுகளை விழிபிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த வைரஸ் மக்கள் மத்தியில் பரவலாகப் பரவி ஏறத்தாழ 6 மாதங்கள் கடந்து இருந்தாலும், இதன் பரவும் வேகம் எள்ளளவும் குறையவில்லை. தொடர்ந்து பாதிப்பு  நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,973,896 ஆக உள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 5 லட்சத்துக்கு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் 61 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா ( 28,36,875)  முதலிடத்திலும், பிரேசில் ( 15,01,353) இரண்டாம் இடத்திலும்,  ரஷ்யா ( 6,61,165) மூன்றாம் இடத்திலும், இந்தியா 4 ஆம் இடத்திலும் உள்ளது.


Next Story