கனடா பிரதமரின் குடியிருப்பில் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர் மீது 22 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு


கனடா பிரதமரின் குடியிருப்பில் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர் மீது 22 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு
x
தினத்தந்தி 5 July 2020 3:15 AM IST (Updated: 5 July 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

கனடா தலைநகர் ஒட்டாவில் ரைடோ ஹாலில் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மாகாண ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ளன.

ஒட்டாவா,

கடந்த வியாழக்கிழமை ஆயுதங்களுடன் காரில் வந்த நபர் ஒருவர் ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை காரை கொண்டு மோதி சேதப்படுத்திவிட்டு துப்பாக்கியுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்பை நோக்கி சென்றபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மணிடோபா மாகாணத்தைச் சேர்ந்த 46 வயதான ஹூரன் என்பதும் அவர் கனடா ராணுவத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் ஹீரன் மீது அத்துமீறி நுழைதல், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல், உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 22 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர். அதே சமயம் எதற்காக பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தார் என்பதை போலீசாரிடம் கூற ஹூரன் மறுத்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தனது குடியிருப்புக்குள் ராணுவ வீரர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் “யாரோ உங்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இது யாரும் கேட்க விரும்பாத ஒன்று. விரைவாக செயல்பட்டு யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட போலீசாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்“ எனக் கூறினார்.

Next Story