அணு ஆயுத விவகாரம் : அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை - வடகொரியா


அணு ஆயுத விவகாரம் : அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை - வடகொரியா
x
தினத்தந்தி 4 July 2020 11:15 PM GMT (Updated: 4 July 2020 7:58 PM GMT)

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பியாங்யாங்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு குண்டுகளை தொடர்ந்து சோதனை செய்து வந்தது.

இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தொடர்ந்து வார்த்தைப்போரில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.

இதன் பலனாக உலகின் இரு துருவங்களாக விளங்கி வந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்நாமில் இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் சந்தித்தனர்.

இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படவில்லை. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என அமெரிக்காவும், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா முற்றிலும் விலக்கிக்கொள்ள வேண்டும் என வட கொரியாவும் பிடிவாதமாக உள்ளன.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாலமாக இருந்த தென் கொரியாவுடன் வடகொரியாவுக்கு மோதல் வலுத்து வருகிறது.

இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் “நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அணு ஆயுத பேச்சுவார்த்தைக்காக கிம் ஜாங் அன்னை டிரம்ப் சந்திப்பார்” என அண்மையில் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனவும் அவர் கூறினார்.

ஆனால் வட கொரியா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான விரோத போக்குகளை மாற்றிக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும் வட கொரியா கூறியுள்ளது.

இது குறித்து பேசிய வடகொரியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி சோ சோன் ஹூய் “சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின்போது செய்துகொண்ட ஒப்பந்தங்களை புறக்கணித்துவிட்டு வடகொரியா மீது விரோத கொள்கையை செயல்படுத்திவரும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? ஏதேனும் பரிவர்த்தனை செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் “அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணரவில்லை. ஏனெனில் இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு கருவி ஆகும்” எனக் கூறினார்.

இதனிடையே அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டின் தலைமை மாற வாய்ப்புள்ளதால் நவம்பர் வரை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை வடகொரியா தவிர்க்கும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story