உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா


உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா
x
தினத்தந்தி 7 July 2020 8:41 AM GMT (Updated: 7 July 2020 8:41 AM GMT)

உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியூயார்க்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும்.

உய்குர் இன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 11 லட்சத்துக்கும் அதிகமானோர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். இந்த நிலையில், உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜின்ஜியாங்கில் இருந்து நியூயார்க் நகர துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 13 டன் சிகை அலங்கார பொருள்கள் இருந்தன. உய்குர் இன பெண்களின் சிகையை வெட்டி இந்த அழகு சாதன பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து இந்த பொருள்களை அமெரிக்க சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அமெரிக்காவில் இது போன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறை ஆகும்.

இது குறித்து அமெரிக்க சுங்கத்துறை துணை கமிஷனர் பிரேண்டா ஸ்மித் கூறுகையில், '' பிற நாடுகளிலிருந்து இது போன்ற அழகு சாதன பொருள்களை இறக்குமதி செய்யப்படும் போது, விநியோகிக்கும் நிறுவனங்களின் உண்மை, தரம் மற்றும் மனித உரிமைகளை மீறுகிறார்களா? என்பதை உறுதி செய்வது அவசியம் . மனித உரிமை மீறல் செயலுக்கு அமெரிக்காவில் அனுமதி கிடையாது '' என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் உய்குர் இன மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் ருஷான் அப்பாஸ் கூறுகையில், '' என் சகோதரி, ஒரு மருத்துவர், சீனாவில்  இரு  ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். ஏதாவது ஒரு தடுப்பு முகாமில் அவர் அடைபட்டிருக்கலாம். இது போன்ற அழகுசாதன பொருள்களை பயன்படுத்தும் பெண்கள், அவற்றை நேர்மையான முறையில் தயாரித்ததார்களா என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் அரசு எங்கள் மக்களை மூன்றாம் தர மக்களாக நடத்துகிறது. பகலில் கொத்தடிமை போல வேலை பார்க்கின்றனர். இரவில் வதை முகாமில் கொண்டு போய் அவர்கள் அடைக்கப்படுகின்றனர்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story