கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேத மருந்து: இந்தியா, அமெரிக்கா கூட்டு பரிசோதனை


கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேத மருந்து: இந்தியா, அமெரிக்கா கூட்டு பரிசோதனை
x
தினத்தந்தி 9 July 2020 9:52 PM GMT (Updated: 9 July 2020 9:52 PM GMT)

கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேத மருந்து பரிசோதனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு பரிசோதனை செய்ய உள்ளன.

வாஷிங்டன், 

கொரோனாவுக்கு எதிரான ஆயுர்வேத மருந்து பரிசோதனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து அறிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 1.20 கோடி பேரை பாதித்து இருக்கிறது. 5.49 லட்சம் பேரை கொன்று குவித்திருக்கிறது.

இந்த வைரஸ் தொற்றால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.

அமெரிக்காவில் 30.55 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருக்கும் நிலையில், 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதுவே இந்தியாவில் 7.67 லட்சம் பேரை பாதித்து இருக்கிறது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்தும் உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வாஷிங்டனில் இருந்து கொண்டு இந்திய அமெரிக்க விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், டாக்டர்கள் குழுவுடன் காணொலி காட்சி வழியாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆயுர்வேத மருந்து பரிசோதனையை இந்திய, அமெரிக்க டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூட்டாக நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-

ஆயுர்வேத மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக, அதன் ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் பயிற்சி திட்டங்களில் எங்கள் நிறுவனங்கள் கூட்டாக ஒத்துழைத்து வருகின்றன.

இந்திய, அமெரிக்க ஆயுர்வேத டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேத மருந்துகளின் கூட்டு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

எங்கள் விஞ்ஞானிகள், இந்த துறையில் அறிவு மற்றும் ஆராய்ச்சி வளங்களை பரிமாறி கொண்டிருக்கிறார்கள்.

இந்திய, அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப மன்றம், எப்போதுமே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் சிறந்து விளங்குவதில் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு, கூட்டு ஆராய்ச்சிக்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை (தொடக்க நிறுவனங்களை) தொடங்கவும், இந்திய, அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப மன்றம் அழைப்பு விடுக்கிறது. இரு தரப்பிலும் உள்ள நிபுணர்களால் அதிவேகமாக ஏராளமான திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

மலிவு விலை மருந்து மற்றும் தடுப்பூசிகள் தயாரிப்பதில் இந்திய மருந்து நிறுவனங்கள், உலகளவில் முன்னணியில் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரிலும் இவை முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள நிறுவனங்களுடன் இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் குறைந்தது 3 தடுப்பூசி திட்டங்களில் ஒத்துழைத்து வருகின்றன. இந்த ஒத்துழைப்புகள், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மட்டுமல்லாமல், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி வழியாக பல நூறு கோடி மக்களுக்கு பயன் அளிக்கும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதில் அளிப்பதில், மீட்டெடுப்பதில் புதுமை முக்கிய உந்துதலாக இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் (தொடக்க நிறுவனங்கள்) நிறுவனங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க தொடங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story