‘வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து’ என்ற அறிவிப்பை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டில்ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு


‘வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து’ என்ற அறிவிப்பை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டில்ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு
x
தினத்தந்தி 9 July 2020 11:15 PM GMT (Updated: 9 July 2020 9:58 PM GMT)

‘வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து’ என்ற அறிவிப்பை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் ஜெட் வேகத்தில் தொடர்கிறது. அங்கு இந்த வைரஸ் தொற்று 30½ லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதித்துள்ளது. 1.13 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இன்னும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராததால் அமெரிக்க பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த முடியாத இக்கட்டான சூழல் தொடர்கிறது.

இதன்காரணமாக அங்கு பல்வேறு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்கி உள்ளன.

மேலும், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம், இலையுதிர் காலத்துக்கு அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக கடந்த திங்கட்கிழமையன்று அறிவித்தது. அங்கு இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்கள் 40 சதவீதம் பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆன்லைனில் பாடம் நடத்தப்போவதாக அறிவித்து இருப்பது அபத்தமானது என கருத்து தெரிவித்தார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி பாடம் நடத்தினால், அவற்றில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.

இதன் காரணமாக அமெரிக்காவில் எப்-1, எம்-1 விசாக்கள் பெற்று படித்து வருகிற வெளிநாட்டு மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். கடந்த ஆண்டு மட்டுமே அமெரிக்காவில் இந்த பிரிவில் 3.73 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 2018-19 கல்வி ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இது அந்த நாட்டின் மொத்த மாணவர் சமூகத்தில் 5½ சதவீத பங்களிப்பு ஆகும். இந்த வெளிநாட்டு மாணவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக 26 சதவீதம்பேர் இந்தியர்கள், 48 சதவீதம் பேர் சீனர்கள் ஆவர்.

குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் விசா ரத்து அறிவிப்பு, வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் ஆன்லைன் முறைக்கு மாறும் பல்கலைக்கழக மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்ற குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் அறிவிப்பை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்குகளை தொடுத்துள்ளன.

இந்த வழக்குகளில், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு மற்றும் நிரந்தர தடை நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

மேலும், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் விசா ரத்து அறிவிப்பு, ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி. ஆகியவற்றின் அனைத்து உயர் கல்விகளையும் குழப்பத்துக்கு ஆளாக்கி உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. அப்போது விசா ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

Next Story