கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா' : சீனா எச்சரிக்கை


கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா : சீனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 July 2020 7:59 AM GMT (Updated: 10 July 2020 7:59 AM GMT)

கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா’ கஜகஸ்தானில் பரவுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெய்ஜிங்,

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில், அறியப்படாத புதிய வகை நிமோனியா  வேகமாக பரவி வருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயானது, உலகை தற்போது உலுக்கி வரும் கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும்  கடந்த ஜூன் மாதத்தில் மட்டும்  இந்நோய்க்கு 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சீனா அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 1,722 பேர்  கண்டுபிடிக்கப்படாத புதிய நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு சீனா, வி சாட் தளம் மூலமாக எச்சரிக்கை செய்தி கொடுத்துள்ளது.


அறியப்படாத இந்த நிமோனியா எந்த வகையான வைரசால் ஏற்படுகிறது  என்பது குறித்து கஜகஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு அமைப்புகள்  தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிமோனியாவை உருவாக்கும் வைரஸ் கொரோனா (கோவிட் 19) உடன் தொடர்புடையதா? என்பதற்கு  எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கஜகஸ்தானின் வடமேற்கு எல்லை  சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை பகிர்ந்து கொள்கிறது. எனவே, இந்த நிமோனியா சீனாவுக்கு பரவி விடாமல் தடுக்க சீன அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.



Next Story