பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டஉலேமா வாரியம் ஆதரவு


பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டஉலேமா வாரியம் ஆதரவு
x
தினத்தந்தி 11 July 2020 11:57 PM GMT (Updated: 11 July 2020 11:57 PM GMT)

பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டஉலேமா வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலை கட்டுவதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் எச்9 பகுதியில் 20,000 சதுரடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இந்து கோவிலை கட்டுவதற்கு பாகிஸ்தானில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சியினர் இந்து கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

எனினும் அந்த வழக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது முஸ்லிம் மதத்தலைவர்கள் பலர் இந்த இந்து கோவிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் பாகிஸ்தான் உலேமா வாரியம் இஸ்லாமாபாத்தில் இந்து கோவிலை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியத்தின் தலைவர் முகமது தாஹிர் மஹ்மூத் அஷ்ரப் கூறுகையில் “இந்து கோவில் கட்டுவது தொடர்பான சர்ச்சையை நாங்கள் கண்டிக்கிறோம். முஸ்லிம் மதத்தலைவர்களின் இந்த போக்கு சரியானதல்ல. இது தொடர்பாக பாகிஸ்தான் உலேமா வாரியம் ஒரு கூட்டத்தை கூட்டி முஸ்லிம் சித்தாந்த கவுன்சில் முன்பு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்“ எனக் கூறினார்.

Next Story