அமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து: 17 மாலுமிகள் படுகாயம்
அமெரிக்க போர்க் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 மாலுமிகள் படுகாயமடைந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் அந்த நாட்டின் மிகப்பெரிய 2-வது கடற்படைத் தளம் உள்ளது.
இங்கு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏராளமான போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 257 மீட்டர் நீளம் கொண்ட “யு.எஸ்.எஸ். போன்ஹோம் ரிச்சர்ட்” என்ற தாக்குதல் ரக கப்பலும் சான்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்தக் கப்பலில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சுமார் 1,000 மாலுமிகள் வரை தாங்கும் திறன் கொண்ட அந்தக் கப்பலில் 160 மாலுமிகள் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கப்பலின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் முழுவதிலும் பரவியது.
இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
இதில் சிலர் கப்பலில் இருந்து வெளியேறினர். அதேசமயம் தீ கப்பலில் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு கொழுந்து விட்டு எரிந்ததால் பெரும்பாலான மாலுமிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கடற்படைக்கு சொந்தமான தீயணைப்பு படகுகள் போர்க்கப்பலை சுற்றி வட்டமிட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தன. இதற்கிடையில் தீயணைப்பு வீரர்கள் கவச உடைகளுடன் கப்பலுக்குள் சென்று மாலுமிகளை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடிய போதும் தீ கட்டுக்குள் வர மறுத்து தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதனால் அந்தக் கப்பலில் அருகே நிறுத்தப்பட்டிருந்த பிற போர்க்கப்பல்களிலும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே அந்த போர்க்கப்பல்கள் அனைத்தும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதற்கிடையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போர்க்கப்பலில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 17 மாலுமிகள், பொது மக்களில் 4 பேர் என மொத்தம் 21 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கப்பலில் தீ பிடித்தது எப்படி என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றிய விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story