மாலியில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 11 பேர் சாவு


மாலியில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 11 பேர் சாவு
x
தினத்தந்தி 13 July 2020 10:00 PM GMT (Updated: 13 July 2020 7:40 PM GMT)

மாலியில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 11 பேர் உயிரிழந்தனர்.

பமாகோ, 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் ஆண்டு துவாரெக் பயங்கரவாதிகள் நாட்டின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமித்தனர். அப்போது முதல் மாலியில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் அந்த நாட்டில் பொருளாதார சரிவும் ஏற்பட்டது.

பயங்கரவாதிகளை ஒடுக்க தவறியது மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறி அந்த நாட்டின் அதிபர் இப்ராஹிம் பவ்பக்கர் கெய்தாவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் அதிபர் இப்ராஹிம் பவ்பக்கர் கெய்தாவை பதவி விலகக் கோரி கடந்த மாதம் அங்கு போராட்டம் வெடித்தது. எதிர்க்கட்சி அமைப்புகளுடன் சேர்ந்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

தலைநகர் பமாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.

இந்த நிலையில் மாலியில் நேற்று ஒரே நாளில் போராட்டம் தொடர்பான வன்முறை சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Next Story