கொரோனா நோயாளிகளால் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் களமிறங்கினர்


கொரோனா நோயாளிகளால் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் களமிறங்கினர்
x
தினத்தந்தி 20 July 2020 4:30 AM IST (Updated: 20 July 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளால் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.

வாஷிங்டன்

கொரோனா நோயாளிகளால் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் களம் இறங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியால் அமெரிக்கா நாளுக்கு நாள் கதிகலங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக அமெரிக்கா இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அங்கு தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நேற்று மதிய நிலவரப்படி 37 லட்சத்து 11 ஆயிரத்து 464 ஆக உள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.

புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா மாகாணங்களில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பச்சிளங்குழந்தைகள் அங்கு தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பது அவர்களின் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதும், இன்னும் பலரும் முக கவசத்தை எதிரியாக கருதி அணிய மறுப்பதும் இந்த மாகாணங்களில் தொற்று தொடர்ந்து பரவுவதற்கு காரணம் ஆவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ், கலிபோர்னியா மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில், குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

இதன் காரணமாக அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ டாக்டர்கள் களம் இறங்கி உள்ளனர்.

பல இடங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு படுக்கைகள் தேவைப்படுவதால், கொஞ்சம் பரவாய் இல்லை என்ற நிலையில் உள்ள நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.

சில இடங்களில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இல்லாமல் அவசர சிகிச்சை பிரிவுகளில் சுவாச பிரச்சினைகளால் அல்லாடுகிற கொரோனா நோயாளிகளை வென்டிலேட்டர்களின் கீழ் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதற்காக நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருப்பதாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியை சேர்ந்த டாக்டர் ஆலிசன் ஹாடோக் கூறி உளளார்.

இந்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எழுச்சி போன்று நான் இதுவரை பார்த்தது இல்லை. நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் கொரோனாவின் புத்தெழுச்சியால் இலையுதிர் காலத்தில லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்ப வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

பிற நாடுகள் நிலவரம்

* தென் ஆப்பிரிக்காவிலும் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்கு இதுவரை பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 3½ லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலி 5 ஆயிரத்தை நெருங்குகிறது. ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரில் பாதிப்பேர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்தான்.

* சீனாவில் உரும்கி நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. அங்கு 13 பேருக்கு தொற்று உறுதியாகி உ க்ஷள்ளது. அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

* தென்கொரியாவிலும் உள்ளூர் அளவில் தொற்று தொடர்கிறது. அங்கு புதிதாக 34 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவும், தென்கொரியாவும் தங்கள் நாட்டுக்கு வருகிற வெளிநாட்டுப்பயணிகள் 2 வாரங்கள் தனிமைப்படுத்துவதை கட்டாயம் ஆக்கி உள்ளன.

* ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்திலும் மறுபடியும் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
1 More update

Next Story