இங்கிலாந்தில் முக கவசங்கள் அணிவது கட்டாயம்; நாளை முதல் புதிய விதிகள் அமல்


இங்கிலாந்தில் முக கவசங்கள் அணிவது கட்டாயம்; நாளை முதல் புதிய விதிகள் அமல்
x
தினத்தந்தி 23 July 2020 3:44 PM GMT (Updated: 23 July 2020 5:17 PM GMT)

இங்கிலாந்து நாட்டில் புதிய விதிகளின்படி வெளியே செல்லும் பொதுமக்கள் நாளை முதல் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பலரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.  பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இந்த நிலையில், இங்கிலாந்தில், புதிய விதிகளின்படி வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நாளை முதல் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ரெயில்வே மற்றும் விமான நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது முக கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.

உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்கி செல்வோரும் முக கவசங்களை அணிய வேண்டும்.  ஆனால், அதே இடத்தில் அவற்றை உண்ணவோ அல்லது குடிக்கவோ செய்யும்பொழுது, முககவசங்களை கழற்றி கொள்ளலாம்.

ஆனால், கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் ஊழியர்களுக்கு முக கவசம் அணிவது என்பது கட்டாயம் இல்லை.  தேவையான இடத்தில் தங்களது பணியாளர்கள் அவற்றை பயன்படுத்தி கொள்வது பற்றி கடை உரிமையாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என அரசின் பரிந்துரை தெரிவிக்கின்றது.

இதுபற்றி சுகாதார செயலாளர் மேட் ஹேன்காக் கூறும்பொழுது, கொரோனாவுக்கு எதிரான போரில் புதிய விதிகளை ஒவ்வொருவரும் பின்பற்றி பெரும் பங்காற்ற வேண்டும்.  நாளை முதல் முக கவசங்களை அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.

இதில், 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்றும் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  இவையன்றி, முககவசம் அணியாமல் கடைக்கு வரும் எவரையும் உள்ளே அனுமதிக்க கடைக்காரர் மறுப்பு தெரிவிக்கலாம் என்றும், முககவசம் அணிய மக்கள் மறுக்கிறார்கள் என்றால் காவல் துறையை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story