உலகளவில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டனர்; உயிரிழந்தோர் 6.40 லட்சமாக உயர்வு


உலகளவில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டனர்; உயிரிழந்தோர் 6.40 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 25 July 2020 11:25 PM GMT (Updated: 25 July 2020 11:25 PM GMT)

உலகளவில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 6.40 லட்சமாக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன், 

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் பிரேசில், இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, சிலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளன.

இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மதிய நிலவரப்படி 1 கோடியே 57 லட்சத்து 59 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 41 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு குணம் அடைந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 90 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது.

அமெரிக்க நாட்டில் 12 லட்சத்து 60 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் 15 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸ் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போது இந்தியாவில் 4.56 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story