சூடானில் கிராமத்துக்குள் புகுந்து ஆயுதமேந்திய கும்பல் கொடூர தாக்குதல்: 60 பேர் கொன்று குவிப்பு


சூடானில் கிராமத்துக்குள் புகுந்து ஆயுதமேந்திய கும்பல் கொடூர தாக்குதல்: 60 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 27 July 2020 11:32 PM GMT (Updated: 27 July 2020 11:32 PM GMT)

சூடானில் கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில், 60 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கார்டூம், 

சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 2003-ம் ஆண்டு அங்கு சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்களும் உருவாகின.

அப்போது தொடங்கி டார்பூர் நகரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பழங்குடியின மக்கள் இடையிலான பிரிவினையை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, கால்நடைகளை திருடிச் செல்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக டார்பூர் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய கும்பல்கள் இடையிலான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு கடந்த 13-ந் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் டார்பூர் பிராந்தியத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமத்துக்குள் ஆயுதமேந்திய கும்பல் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியது.

இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து சூடான் அரசு டார்பூர் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளது.


Next Story