அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என டிரம்ப் கருத்து


அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என டிரம்ப் கருத்து
x
தினத்தந்தி 30 July 2020 4:33 PM GMT (Updated: 30 July 2020 4:33 PM GMT)

மக்கள் பாதுகாப்பாக வாக்குகளை அளிக்க முடியும் வரை அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக மிக மோசமாக பாதிப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறை களம் காணும் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.

இந்த தேர்தல் குறித்து அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்புகளில் அதிபர் டிரம்ப் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற தேவையான அனைத்து முயற்சிகளையும் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

“இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க இயலும்வரை அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமே?” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள ஆலோசனை அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது;-

“கொரோனா தொற்றின் காரணமாக தபால் ஒட்டு முறை பயன்படுத்தப்பட்டால், அதன் காரணமாக தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதுதான் வரலாற்றிலேயே மோசமான தேர்தலாக அமையும். அந்நிய நாடுகள் இந்த முறையின் காரணமாக தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் தபால் ஒட்டுமுறை இதற்கு முன்பு முயற்சி செய்யப்பட்ட இடங்களில் பெரும் கஷ்டமாக முடிந்துள்ளது. அப்படி நடந்தால் அமெரிக்காவிற்கும் அது மிக அவமானகரமானதாக அமையும். மக்கள் முறையாக, சரியாக மற்றும் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story