முக கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவார்கள்; அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பு


முக கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவார்கள்; அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 July 2020 11:57 PM GMT (Updated: 30 July 2020 11:57 PM GMT)

முக கவசம் அணியாத எம்.பி.க்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 45 லட்சத்தை நோக்கி விரைகிறது. பலியானோரின் எண்ணிக்கையும் 1½ லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இதனால் அங்கு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப்கூட வலியுறுத்தினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அனைத்து உறுப்பினர்களும், ஊழியர்களும் கண்டிப்பாக முக கவசம் அணியுமாறு சபை உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகர் நான்சி பெலோசி, இந்த விதிமுறையை மீறுகிற எவரையும் அறையில் இருந்து நீக்குவதாக எச்சரித்தார்.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூயி கோமெர்ட் (வயது 66) முக கவசம் அணியாமல் நாடாளுமன்றத்தை அடிக்கடி சுற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்துதான் சபாநாயகர் நான்சி பெலோசி, முக கவச விவகாரத்தில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சபையில் யாரும் முக கவசம் அணியாமல் இருந்தாலும், அவர்கள் சபையை விட்டும் அகற்றப்படுவார்கள் என்று சபாநாயகர் நான்சி பெலொசி கண்டிப்புடன் கூறி உள்ளார். யாரும் முக கவசம் அணியாமல் சபைக்கு வந்தால் அவர்களை சபை காவலர் வெளியேற்றுவார் என்றும் அறிவித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் சபையில் அறிவிக்கையில், “ அனைவரின் உடல்நலம், பாதுகாப்பு, நல்வாழ்வுக்கான மரியாதைக்குரிய அடையாளமாக அனைத்து உறுப்பினர்களும், ஊழியர்களும் இந்த தேவையை கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 3 பேர், குடியரசு கட்சி எம்.பி.க்கள் 10 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த சூழலில் சபாநாயகர் நான்சி பெலோசியின் முக கவசம் குறித்த கண்டிப்பான அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Next Story