ஏமனில் திருப்பம்; தன்னாட்சி கோரிக்கையை பிரிவினைவாதிகள் கைவிட்டனர்


ஏமனில் திருப்பம்; தன்னாட்சி கோரிக்கையை பிரிவினைவாதிகள் கைவிட்டனர்
x
தினத்தந்தி 31 July 2020 12:06 AM GMT (Updated: 31 July 2020 12:06 AM GMT)

ஏமனில் பிரிவினைவாதிகள் தன்னாட்சி கோரிக்கையை கைவிட்டனர்.

சனா,

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் இயங்கி வருகிற எஸ்.டி.சி. என்று அழைக்கப்படுகிற தெற்கு இடைக்கால கவுன்சில் பிரிவினைவாதிகள், கடந்த ஏப்ரல் மாதம் தன்னாட்சி வேண்டும் என்ற பிரகடனத்தை வெளியிட்டனர்.

ஆனால் இப்போது திடீர் திருப்பமாக இந்த பிரிவினைவாதிகள், ஏமனில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளனர். இதன்படி அவர்கள் தன்னாட்சி கோரிக்கையை கைவிட்டனர்.

இந்த ஒப்பந்தம், 30 நாட்களில் உருவாக்கப்பட உள்ள புதிய ஏமன் அரசில் தெற்கு இடைக்கால கவுன்சில் பிரிவினைவாதிகள் இடம் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தமானது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசை ஆதரிக்கும் சவுதி கூட்டணியில் ஏற்பட்ட பிளவினை சரி செய்யும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த பிரிவினைவாதிகளை சவுதி அரேபிய கூட்டணியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம் ஆதரித்ததால் அந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இப்போது அது முடிவுக்கு வந்து விடும் என கருதப்படுகிறது.

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story