சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு


சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 1:06 PM GMT (Updated: 31 July 2020 1:06 PM GMT)

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பீஜிங்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.

இதனை தொடர்ந்து சீனாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் சீனத் தலைநகர் பீஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் துவங்கியது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது சீனாவின் சின்ஜியாங் மாகாணத்திலும் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு இன்று  மட்டும் 112 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரமான உரும்யூ நகரில், 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 18,000-க்கும் அதிகமானோர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இந்த மாகாணத்தில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் மருந்துவச் சான்றிதழை அளித்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story