கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்; அதை எதிர்கொள்ளுங்கள் - பிரேசில் அதிபர்


கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்; அதை எதிர்கொள்ளுங்கள் - பிரேசில் அதிபர்
x
தினத்தந்தி 1 Aug 2020 2:35 PM GMT (Updated: 1 Aug 2020 2:35 PM GMT)

கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்றும், அதை எதிர்கொள்ளுங்கள் என்றும் பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

பிரேசிலியா, 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 52,383 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,485 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில், 1,212 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர். இதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு 92,475 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் கொரோனா பாதிப்புபில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 18,84,051 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 6,89,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சூழலில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ கொரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறிய நிலையில், அவரின் மனைவிக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன், இயல்பாக இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்றும் அதை எதிர்கொள்ளுங்கள் என்றும் பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் ஒரு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக எல்லோரும் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எதற்காக கொரோனாவுக்கு பயப்படுகிறீர்கள். அதனை எதிர்கொள்ளுங்கள். நான் கொரோனாவினால் நிகழ்ந்த மரணங்களுக்கு வருத்தப்படுகிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுதான் வாழ்க்கை” என்று தெரிவித்துள்ளார்.


Next Story