கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மின்னணு கருவி மூலம் கண்காணிக்க சிங்கப்பூர் திட்டம்


கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மின்னணு  கருவி மூலம் கண்காணிக்க சிங்கப்பூர் திட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2020 7:51 AM GMT (Updated: 3 Aug 2020 7:51 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களை மின்னணு முறையில் கண்காணிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர்,

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் சிங்கப்பூர் படிப்படியாக தனது எல்லைகளை திறந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து  திரும்பும் பயணிகளால் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் சற்று வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும்  குடிமக்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் என அனைவரையும் மின்னணு முறையில் கண்காணிக்க சிங்கப்பூர் திட்டம் வகுத்துள்ளது.

வரும் 11 ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வரும் தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிப்பவர்கள், குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவர்கள்  உள்ளிட்டோரை  வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் வகையில், அவர்களை டிராக் செய்ய மின்னணு டேக் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ், புளூடூத் வசதிகள் கொண்ட இந்த மின்னணு டேக் மணிக்கட்டில் அணிந்து கொள்ளும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. சிங்கப்பூர் வருபவர்கள் இந்த கருவியை ஆக்டிவேட் செய்ய வேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் வரும் நோட்டிபிகேஷனை ஏற்று அனுமதி அளிக்க வேண்டும். அதன்பிறகு,  தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வீட்டை விட்டு வெளியேறினாலோ, கருவியில் மாற்றம் செய்ய நினைத்தாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதி இந்தக் கருவியில் உள்ளது.

இதன் அடிப்படையில், உடனடியாக அதிகாரிகள், விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள். சிங்கப்பூரில் தொற்று நோய் பரப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 7,272 ( இந்திய ரூபாய் மதிப்பில் 5,45,527.26) அபராதமாக விதிக்கப்படும். அல்லது ஆறு மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.  12-வயதுக்கு உட்பட்ட குழைந்தைகள் இந்த மின்னணு டேக் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தென்கொரியா,  ஹாங்காங் ஆகிய நாடுகள் மின்னணு டேக் மூலம் கண்காணிக்கும் நடைமுறையை பயன்படுத்தின என்பது கவனிக்கத்தக்கது.  தற்போது, சிங்கப்பூர் அறிவித்துள்ள மின்னணு டேக் கருவி எவ்வாறு இருக்கும் என்ற தகவலை சிங்கப்பூர் அரசு வெளியிடவில்லை. எனினும் ஆடியோ, வீடியோ பதிவுகள் எதையும் மேற்கோள்ளாது எனவும் தனிப்பட்ட தரவுகளையும் இந்தக் கருவி சேமிக்காது என்றும் சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Next Story