டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்; மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்


டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்; மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2020 12:03 AM GMT (Updated: 4 Aug 2020 12:03 AM GMT)

டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்-டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது.

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இது குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்ய நாதெல்லா நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் “ஜனாதிபதியின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை மைக்ரோசாப்ட் முழுமையாக பாராட்டுகிறது. டிக்-டாக் செயலியை ஒரு முழுமையான பாதுகாப்பு மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், அமெரிக்காவுக்கு சரியான பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கும் மைக்ரோசாப்ட் உறுதிபூண்டுள்ளது” எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story