அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு


அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2020 11:19 PM GMT (Updated: 4 Aug 2020 11:19 PM GMT)

அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும்.

பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.

இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

இதனிடையே டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

அந்த அடிப்படையில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘எச்1 பி’ விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் விதித்து வருகிறார்.

அந்த வகையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு எச்1பி, வழங்குவதை இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை குறிப்பாக ‘எச்1 பி’ விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்த கூடாது என டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டென்னிசி மாகாணத்தில் உள்ள அமெரிக்க அரசுக்கு சொந்தமான டி.வி.ஏ. என்ற நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூன் மாதம் 20 சதவீத ஐ.டி. ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, தற்காலிக விசாவில் இருக்கும் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தியது. இந்த விஷயம் ஜனாதிபதி டிரம்ப் கவனத்திற்கு வந்ததும், டிவிஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை நேரில் அழைத்து கடுமையாக சாடினார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்க அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மந்திரிகளுடன் டிரம்ப் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் முடிவில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்த கூடாது என்பதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் “அரசு நிறுவனங்களில் மிகவும் எளிமையான விதிகளின் கீழ் அமெரிக்கர்களை பணியமர்த்துவதை உறுதி செய்வதற்கான நிர்வாக உத்தரவில் இன்று நான் கையெழுத்திட்டேன்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மலிவான வெளிநாட்டு உழைப்பைப் பெறுவதற்காக கடின உழைப்பாளிகளான அமெரிக்கர்கள் வேலை இழப்பதை தனது நிர்வாகம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என கூறினார்.

மேலும் அவர் “தற்போது நாங்கள் நடத்திய ஆலோசனையின் போது, ‘எச்1 பி’ விசா ஒழுங்குமுறையை நாங்கள் இறுதி செய்தோம். இதனால் எந்த அமெரிக்க தொழிலாளர்களும் மீண்டும் மாற்றப்பட மாட்டார்கள். ‘எச்1 பி’ விசா மலிவான தொழிலாளர் திட்டங்களுக்காக அல்லாமல், அமெரிக்க வேலையை அழிப்பதற்கு அல்லாமல், அமெரிக்க வேலைகளை உருவாக்க அதிக சம்பளம் வாங்கும் திறமைக்கு ‘எச்1 பி’ விசா பயன்படுத்தப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

இதனிடையே ‘எச்1 பி’ விசா நடைமுறையில் சில சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், அது பற்றிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story