ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி - இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்


ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி - இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்
x
தினத்தந்தி 5 Aug 2020 8:45 PM GMT (Updated: 5 Aug 2020 7:46 PM GMT)

ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்.

நியூயார்க், 

வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளில் ஆதரவு அளிப்பதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது.

இந்த வகையில் ஐ.நா.சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான (சுமார் ரூ.115½ கோடி) காசோலையை நியூயார்க்கில் ஐ.நா. சபையின் தென்-தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி நேரில் வழங்கினார்.

இந்த நிதியில் 6 மில்லியன் டாலர் (சுமார் ரூ.45 கோடி), மொத்த நிதிக்கானது. இதில் அனைத்து வளரும் நாடுகளும் கூட்டாண்மைக்கு தகுதி உடையவை.

மீதி நிதி 9.46 மில்லியன் டாலர் (சுமார் ரூ.70½ கோடி) காமன்வெல்த் நாடுகளுக்கானவை.

இதுபற்றி ஜார்ஜ் செடீக் கருத்து தெரிவிக்கையில், “இந்தியா-ஐ.நா. நிதி அதன் ஆரம்ப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளது. இந்த நிதியை தொடர்ந்து வளர்ப்பதற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு, அதன் பயனுள்ள திட்டங்களின் தொகுப்பை காட்டுகிறது. மேலும், அதன் கூட்டாண்மையானது உண்மையான தென்-தெற்கு ஒற்றுமை மற்றும் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சவால் களை எதிர்ப்பதில் இந்திய தலைமையின் நிரூபணத்தையும் காட்டுகிறது” என்றார்.

இதையொட்டி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை, “ தென் நாடுகளிடையே ஒற்றுமைக்கான அழைப்பு, கொரோனா வைரஸ் தொற்று நோய் பின்னணியில் ஒரு பெரிய எதிரொலியை கண்டறிந்துள்ளது. உலகமெங்கும் உள்ள வளர்ந்து வரும் நாடுகள், பொது சுகாதாரம், வறுமை குறைப்பு மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றில் அவர்கள் செய்த சாதனைகள், ஒரு பின்னடைவை தடுக்க போராடுகின்றன. இந்த கட்டத்தில் பரஸ்பர ஆதரவு, ஒத்துழைப்பின் தேவை அதிகமாக உள்ளது. எப்போதும் இந்தப் பின்னணியில் இந்திய அரசு, சக வளரும் நாடுகளை அவர்களின் தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளில் ஆதரிப்பதற்கான தனது உறுதியை புதுப்பித்துள்ளது” என கூறுகிறது.

Next Story