லெபனானை உலுக்கிய பயங்கர வெடி விபத்து: 100 பேர் பலி; 4,000 பேர் படுகாயம்


லெபனானை உலுக்கிய பயங்கர வெடி விபத்து: 100 பேர் பலி; 4,000 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Aug 2020 11:45 PM GMT (Updated: 5 Aug 2020 9:24 PM GMT)

லெபனானை உலுக்கிய பயங்கர வெடி விபத்தில் 100 பேர் பலியாகினர். 4,000 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெய்ரூட், 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் உள்நாட்டுப் போர், இஸ்ரேலுடனான மோதல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகிவற்றால் மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் அந்த நாடு கடுமையான பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் அந்த நாட்டை மேலும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இந்த நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடந்த அதிபயங்கர வெடி விபத்து மொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது.

இந்தச் சம்பவம் லெபனான் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து

பெய்ரூட்டில் உள்ள ஒரு துறைமுகத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் வழக்கம்போல் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது துறைமுகத்தின் ஒரு பகுதியில் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் துறைமுகப் பகுதியில் வானுயரத்துக்கு கரும்புகை சூழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து அவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிடங்களுக்குள் காற்றின் வேகத்தால் தீ, துறைமுகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவியது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடிப்பு ஒட்டுமொத்த பெய்ரூட்டையும் உலுக்கியது. துறைமுகத்தை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு நகரின் அனைத்து இடங்களும் முற்றிலுமாக சிதைந்து போனது. இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெடிப்பு நடந்த இடத்தில் இருந்த சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாலும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் பலி எண்ணிக்கை உயரலாம் என லெபனான் அரசு கவலை தெரிவித்துள்ளது.

பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்து தரக்கூடிய வேதிப்பொருள் வெடித்ததால் இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களிலிருந்து தீ பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த வெடி விபத்து தொடர்பாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ரூட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 3 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், அவசரக்கால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.500 கோடி) உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தினால் பெய்ரூட்டில் இருக்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளும் விபத்தில் படுகாயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த பயங்கர வெடி விபத்து பெய்ரூட் நகரில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கியதால் சுமார் 2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து, வீதியில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே மிகவும் மோசமான வேதிப்பொருள் வெடித்துள்ளதால் மக்கள் வெளிக்காற்றை சுவாசிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் அனைவரும் லெபனான் வெடி விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.

அந்த வகையில் ரஷியா 5 விமானங்களில் டாக்டர்கள், மீட்பு குழுவினர் மற்றும் பொது சுகாதார கண்காணிப்புக்குழு பணியாளர்களை லெபனானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதேபோல் பிரான்சும் பல டன் நிவாரண பொருட்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணியாளர்களை விமானத்தில் லெபனானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையில் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் கஜகஸ்தான் நாட்டின் தூதர் காயமடைந்தது தெரியவந்துள்ளது. எனினும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story