இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 55 சதவீத வாக்குப்பதிவு; இன்று முடிவுகள் வெளியாகிறது


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 55 சதவீத வாக்குப்பதிவு;  இன்று முடிவுகள் வெளியாகிறது
x
தினத்தந்தி 6 Aug 2020 1:30 AM GMT (Updated: 6 Aug 2020 1:30 AM GMT)

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.


கொழும்பு,

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். அதன்படி இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலை ஆகஸ்டு 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் நேற்று பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என 4 முக்கிய கட்சிகள் களம் காண்கின்றன. 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேச்சை இயக்கங்களை சேர்ந்த 7,200 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இலங்கையில் வாக்குரிமை பெற்ற 1 கோடியே 60 லட்சம் பேருக்காக நாடு முழுவதும் 12 ஆயிரத்து 985 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த வாக்குச்சாவடியில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 8 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த விதிகளைப் பின்பற்றி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா அச்சம் இருந்த போதிலும் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதில் ஆர்வம் காட்டினர்.

அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து வாக்களித்தனர். அதன்படி மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவானதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசபிரியா கூறுகையில், ‘‘இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நுவாராஎலியா நகரத்தில் அதிகபட்சமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது’’ என தெரிவித்தார். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு மதியம் 2.30 அளவில் முதல் கட்ட முடிவுகள் வெளியாகும் என்றும் இறுதியான முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்றும் மகிந்த தேசபிரியா கூறினார்.


Next Story