லெபனான் வெடிவிபத்து: 157 பேர் பலி; ராணுவ கட்டுப்பாட்டுக்குள் பெய்ரூட் நகரம்


லெபனான் வெடிவிபத்து:  157 பேர் பலி; ராணுவ கட்டுப்பாட்டுக்குள் பெய்ரூட் நகரம்
x
தினத்தந்தி 6 Aug 2020 3:07 PM GMT (Updated: 6 Aug 2020 3:07 PM GMT)

லெபனான் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதுடன் பெய்ரூட் நகரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பெய்ரூட்

லெபனான் நாடு உள்நாட்டு போரால் சீர்குலைந்து உள்ளது.  அந்த நாடு கடுமையான பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் அந்த நாட்டை மேலும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இந்த நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடந்த 4ந்தேதி
திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிடங்களுக்குள் காற்றின் வேகத்தில் துறைமுகத்தின் மற்ற இடங்களுக்கும் தீ பரவியது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடிப்பு ஒட்டுமொத்த பெய்ரூட்டையும் உலுக்கியது. துறைமுகத்தை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு நகரின் அனைத்து இடங்களும் முற்றிலும் சேதமடைந்தன.  கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ரூட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும்.  இந்த வெடிவிபத்தில் கஜகஸ்தான் நாட்டின் தூதர் காயமடைந்தது தெரியவந்துள்ளது. 

இதேபோன்று ஜெர்மன் நாட்டு தூதரக பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  இந்த வெடிவிபத்து சம்பவம் பற்றி விசாரிக்க லெபனான் அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில், லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  5 ஆயிரம் பேர் வரை காயம் அடைந்து உள்ளனர்.  துறைமுகத்திற்கு அருகே இருந்த பலரை காணவில்லை.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

பெய்ரூட் நகரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.  இதனால், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெய்ரூட்டில் அடுத்த இரு வாரங்களுக்கு அவசரநிலை அமலில் இருக்கும்.  இந்த அறிவிப்பினை லெபனான் அமைச்சரவை வெளியிட்டு உள்ளது.

Next Story