பெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்


பெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2020 10:25 PM GMT (Updated: 7 Aug 2020 10:25 PM GMT)

பெய்ரூட் வெடி விபத்தில் சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

பெய்ரூட், 

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் ஒட்டு மொத்த பெய்ரூட் நகரமும்

சிதைந்து போய்விட்டது. உலகையே உலுக்கிய இந்த வெடி விபத்தில் 100 பேர் பலியானதாகவும் 4,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்த கோர விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகினர். விபத்து நடந்து 3 நாட்களாகியும் துறைமுகப் பகுதியில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 149 ஆக அதிகரித்திருக்கிறது.

இது ஒரு விபத்து என்ற போதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிர் பறிபோனதற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

எனவே இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்க வேண்டும் என லெபனான் மக்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் லெபனான் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் கூறுகையில் “பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைப்படி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கூறினார். மேலும் பெய்ரூட் நகரை மீண்டும் கட்டியெழுப்ப லெபனானுக்கு தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் உதவ சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே லெபனானின் நட்பு நாடான பிரான்சின் அதிபர் மெக்ரான் லெபனான் சென்று பெய்ரூட் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பெய்ரூட் குடிமக்களுக்கு பிரான்ஸ் சார்பில் உரிய மருத்துவம் மற்றும் நிதி உதவி வழங்குவதாக உறுதி அளித்தார்.

Next Story