அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து


அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
x
தினத்தந்தி 7 Aug 2020 11:00 PM GMT (Updated: 7 Aug 2020 10:30 PM GMT)

அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

வாஷிங்டன் ,

இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும், அந்த நாட்டின் மூத்த எம்.பி.க்கள் பலரும் வரவேற்றனர்.

அது மட்டுமின்றி அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இதுதொடர்பாக அமெரிக்க எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதி டிரம்புக்கு கடிதம் எழுதினர்.

நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

அண்மையில் இதுகுறித்து பேசிய டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.

“நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக டிக்-டாக்கின் உரிமையாளர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என்று அந்த நிர்வாக உத்தரவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிக்-டாக் நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

‘வீசாட்’ செயலிக்கும் தடை

இதுகுறித்து அவர் கூறுகையில் “சீனாவுக்கு சொந்தமான செயலிகளின் பயன்பாடு அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. டிக்-டாக்கின் தரவு சேகரிப்பு அமெரிக்க அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தி உளவு பார்க்கவும் சீனாவை அனுமதிக்கிறது” எனக் கூறினார்.

இதனிடையே சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வீசாட்’ என்ற செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட பைட்டான்ஸ் மற்றும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டன.

டிரம்பின் இந்த திடீர் நடவடிக்கையால் டிக்-டாக்கின் அமெரிக்க வியாபார உரிமத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவில் ஏதாவது மாற்றமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் சில தணிக்கை தேவைகளை பின்பற்றாதவை, எனவே அவற்றுக்கு தடை விதிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகளான நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக் போன்றவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அப்படி நடக்காத பட்சத்தில் அந்த நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தைகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Next Story