அமெரிக்காவில் எரிவாயு விபத்து: ஒருவர் பலி, அடுத்தடுத்த வீடுகள் பலத்த சேதம்


அமெரிக்காவில் எரிவாயு  விபத்து: ஒருவர் பலி, அடுத்தடுத்த வீடுகள் பலத்த சேதம்
x
தினத்தந்தி 10 Aug 2020 5:57 PM GMT (Updated: 10 Aug 2020 5:57 PM GMT)

அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் என்ற இடத்தில் இயற்கை எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.

பால்டிமோர்,

அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் என்ற இடத்தில்  இயற்கை எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் அடுத்தடுத்த வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்து இடிபாட்டில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெடி விபத்து ஏற்பட்ட இடங்களில் உள்ள வீடுகள் அடுத்தடுத்து சேதம் அடைந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? எனவும் மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  படுகாயத்துடன் மீட்கப்பட்ட 3  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகள் உள்பட 5 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்டிமோர் இயற்கை எரிவாயு விநியோக கம்பெனியின்  அதிகாரிகளும் அவசர மேலாண்மை  அதிகாரிகளும் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்கான எரிவாயு விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.  விபத்துக்கான காரணம் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

Next Story