ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை நீட்டிக்க 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை


ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை நீட்டிக்க 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2020 11:43 PM GMT (Updated: 10 Aug 2020 11:43 PM GMT)

அக்டோபரில் முடிவுக்கு வர இருக்கும் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

டெஹ்ரான், 

அக்டோபரில் முடிவுக்கு வர இருக்கும் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. மேலும் ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நீடித்தது.

இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


மேலும் ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐ.நா. குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வல்லரசு நாடுகள் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனால் ஈரான் மீண்டும் அணு ஆயுத பாதைக்கு திரும்பியுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை வருகிற அக்டோபரில் முடிவுக்கு வர உள்ளது. எனவே ஈரான் மீதான இந்த தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என, அமெரிக்கா கூறி வருகிறது.இது தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


இந்த நிலையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத் மற்றும் பக்ரைன் ஆகிய 6 வளைகுடா நாடுகள் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை உள்ளது.

அதில் ஈரான் போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் மற்றும் போர்க் கப்பல்கள் போன்ற வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்களை வாங்குவதை தடுக்கும் ஆயுத தடையை நீட்டிப்பதற்கு மேற்கூறிய 6 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரான் அண்டை நாடுகளில் ஆயுத தலையீடுகளை நிறுத்தவில்லை என்றும் நேரடியாகவும் ஈரானால் பயிற்சியளிக்கப்பட்ட ஆயுத இயக்கங்கள் மூலமாகவும் அந்த நாடு ஆயுத பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருவதாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.


மேலும் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருவதாக இந்த கடிதத்தில் கூறியுள்ளது.

கத்தார் நாட்டுடனான மோதல் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் ஈரானுடனான தூதரக உறவை துண்டித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, கத்தாருடன் தொடர்ந்து விரோதப்போக்கை கையாண்டு வரும் நிலையில் ஈரான் மீதான ஆயுத தடையை விலக்குவது பொருத்தமானதாக இருக்காது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வளைகுடா நாடுகளில் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் இந்த கடிதம் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் பொறுப்பற்ற செயல் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி கூறினார்.

Next Story