அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% குறைவு; அதிபர் டிரம்ப் பேட்டி


அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% குறைவு; அதிபர் டிரம்ப் பேட்டி
x
தினத்தந்தி 11 Aug 2020 8:29 AM GMT (Updated: 11 Aug 2020 8:29 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% அளவிற்கு குறைந்துள்ளது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  இதுவரை 1.6 லட்சத்திற்கும் கூடுதலானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  எனினும் 27 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.  இந்த முயற்சியில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டு உள்ளன.  எனினும், இந்த முயற்சியில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை.

இந்த வருடம் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, இந்த வருட இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து எங்களிடம் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.  அது கிடைத்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும்.

கடந்த 7 நாட்களில் நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஊக்கமளிக்கும் அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம்.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14% குறைந்து உள்ளது.  இதேபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் 7% குறைந்துள்ளனர்.  உயிரிழப்பு விகிதமும் 9% குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.

Next Story