பெலாரஸ் போராட்டம் குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும் - சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை


பெலாரஸ் போராட்டம் குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும் - சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2020 11:49 PM GMT (Updated: 12 Aug 2020 11:49 PM GMT)

பெலாரஸ் போராட்டம் குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க், 

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ வெற்றி பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் அலெக்சாண்டர் தொடர்ந்து 6-வது முறையாக அந்த நாட்டின் அதிபராகியுள்ளார்.

இதனிடையே தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் எனவே தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வியட்லானா அறிவித்தார். அதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு நகரங்களில் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.

தொடர்ந்து 4 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெலாரசில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக குற்றம் சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.வை வலியுறுத்தி உள்ளது.

மேலும் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை மதிக்க வேண்டும் எனவும், போராட்டக்காரர்கள் மீது அதிகப்படியான சக்தியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பெலாரஸ் போலீசை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story