உலக செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் + "||" + Kamala Harris running for US Vice President: A native of Tamil Nadu

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்
அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
வாஷிங்டன், 

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் நடக்க இருக்கிறது. அதன்படி குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது யார் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்வேன் என ஜோ பிடன் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதே போல் அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனது வாக்குறுதி மற்றும் கட்சியினரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கருப்பின பெண்ணுமான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார்.இதுகுறித்து ஜோ பிடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் என்னுடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட நான் கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்துள்ளேன். உங்களுடன் சேர்ந்து நாங்கள் இருவரும் டிரம்பை வெல்லப் போகிறோம்.

இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெருமை மற்றும் கொண்டாட்டமான தருணம். அச்சமில்லாத போராளியாகவும், நாட்டின் தலைசிறந்த அரசு ஊழியராகவும் கமலா ஹாரிஸ் இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

55 வயதான கமலா ஹாரிசின் தந்தை டெனால்டு ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜமைக்காவைச் சேர்ந்தவர்; இந்தியரான அவரது தாய் சியாமளா கோபாலன் ஹாரிஸ் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்தவர் ஆவார். கமலா ஹாரிசின் பெற்றோர் டொனால்டு ஹாரிஸ் - சியாமிளா கோபாலன்.தற்போது கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த செனட் சபை எம்.பி.யாக இருக்கிறார்.

மேலும் இவர், ‘கலிபோர்னியாவின் அரசு தலைமை வக்கீலாக தேர்வு செய்யப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்’, அமெரிக்க செனட் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த பெண் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

மேலும் தற்போது ஒரு பெரும் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் என்கிற பெருமையும் கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

ஜோ பிடன் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க செய்தி என்பதால் நேற்று அமெரிக்க ஊடகங்கள் அனைத்திலும் கமலா ஹாரிஸ் தான் தலைப்புச் செய்தியாக இருந்தார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து கமலா ஹாரிஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஜோ பிடனால் அமெரிக்க மக்களை ஒன்றிணைக்க முடியும்; ஏனெனில் அவர் நமக்காக போராடுகிறார். அவர் நாம் கொள்கைகளுக்கு ஏற்ப வாழும் ஒரு அமெரிக்காவை உருவாக்குவார்” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில், “இன்று நம் நாட்டுக்கு ஒரு நல்ல நாள். நான் கமலா ஹாரிசை நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன். அவர் தனது அரசியலமைப்பை காத்து, நியாயம் தேவைப்படும் எல்லோருக்காகவும் போராடுகிறார்” என தெரிவித்தார்.

அதேபோல் அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய அமெரிக்கர்கள் கமலா ஹாரிசுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருமை மற்றும் கொண்டாட்டத்தில் தருணம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே கருப்பினத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைத்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள கருப்பினப் பெண்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“கமலா ஹாரிஸ் ராணுவ நிதி குறைக்க விரும்புகிறார்; மோசடியை ஆதரிக்கிறார்; அவர் முதன்மையானவற்றில் மோசமாக நடந்து கொள்பவர்” என டிரம்ப் விமர்சனம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி பிரச்சினை எழுப்பும் டிரம்ப்
அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப் பிரச்சினை கிளப்பி இருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...