சீனாவில் குணம் அடைந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் இருவருக்கு கொரோனா !


சீனாவில் குணம் அடைந்து  சில மாதங்கள் கழித்து   மீண்டும்  இருவருக்கு கொரோனா !
x
தினத்தந்தி 14 Aug 2020 7:16 AM GMT (Updated: 14 Aug 2020 7:16 AM GMT)

சீனாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த சிலருக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த இரண்டு பேருக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் முதன் முதலில் கொரோனா ( கோவிட் 19) தொற்று வெளிப்பட்ட மாகாணமான  ஹூபெயில், 68-வயதான பெண் ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணம் அடைந்து இருந்தார். 

அதேபோல்,  கடந்த ஏப்ரல் மாதம் ஷாங்காய் மாகாணத்தை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணம் அடைந்து இருந்தார். அவருக்கு மீண்டும் அறிகுறிகள் எதுவும் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  தொற்றில் இருந்து குணம் அடைந்த ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று ஏற்படுவது மிகவும் அரிதானதே என்று சுகாதார நிபுணர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.  

ஆனால், சில நோயாளிகளுக்கு மீண்டும் ஏன்  நீண்ட காலம் அறிகுறிகள் தென்படுகிறது என்பது முக்கிய கேள்வியாக அமைந்துள்ளது.  இந்நோய்த்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த காலமே உடலில் நீடிக்கிறதா? என்ற சந்தேகமும் சுகாதார வல்லுநர்களின் மனதில் எழாமல் இல்லை. 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உருவாகும் ஆண்டிபாடிகள், சீக்கிரமாகவே அவர்களது உடலில் இருந்து மாயமாகிவிடுவது சில தரவுகளில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, கொரோனா தொற்றுக்கு மீண்டும் சிலர் ஆளாகிறார்கள் என்று தெரிகிறது.  ஆண்டிபாடிகள் உடலில் இருந்து மறைந்து போனாலும், சில செல்கள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா தொற்று வராமல் தடுப்பதாகவும்  நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.

Next Story