இலங்கையில் மற்றொரு நிழலுலக தாதாவை சுட்டு வீழ்த்திய சமியாவின் கடந்தகால பின்னணி


இலங்கையில் மற்றொரு நிழலுலக தாதாவை சுட்டு வீழ்த்திய சமியாவின் கடந்தகால பின்னணி
x
தினத்தந்தி 23 Aug 2020 7:44 AM GMT (Updated: 23 Aug 2020 8:04 AM GMT)

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி சமியாவின் கடந்தகால பின்னணி விவரம் வெளிவந்துள்ளது.

கொழும்பு,

இலங்கையின் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா (வயது 35).  இவர் மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு போன்ற வழக்குகள் உள்ளன.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை சேரன்மாநகர் பகுதியில் தலைமறைவாக தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் 3ந்தேதி மாரடைப்பினால் இறந்தார்.  எனினும், இவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் மரபணு சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில், அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க கடந்த 12ந்தேதி நடந்த இலங்கை போலீசாரின் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.  இந்நிலையில் அங்கொட லொக்காவின் மற்றொரு கூட்டாளியான சமிந்தா சந்தமால் எதிரிசூர்யா என்ற சமியா (வயது 41) போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டார்.

இலங்கையில் போதை பொருள் கடத்தல்காரர்களில் முக்கிய புள்ளிகளில் ஒருவராக சமியா இருந்து வந்துள்ளார்.  அவரை போலீசார் கைது செய்து, மறைத்து வைத்திருக்கும் ஆயுதம் மற்றும் போதை பொருளை பறிமுதல் செய்வதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

அவரை கொண்டு செல்லும் வழியில் போலீஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை சமியா பறித்துள்ளார்.  அவர் துப்பாக்கியால் சுட்டதில், அருகேயிருந்த போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.  இதனால் பதிலுக்கு போலீசார் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில் சமியா உயிரிழந்து உள்ளார்.

இதன்பின்னர் கம்பஹா பொது மருத்துவமனைக்கு சமியாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.  கடந்த 2015ம் ஆண்டில் கதுவேலா நீதிமன்றத்தில், சமயன் என்ற நிழலுலக தாதா மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் சமியாவுக்கு நேரடி தொடர்பு உண்டு என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதில் காயமடைந்து, சிகிச்சை பெற்று உயிர் தப்பிய சமயன், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2017ம் ஆண்டு
சிறை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டபொழுது சுட்டு கொல்லப்பட்டார்.  அவருடன் வாகனத்தில் இருந்த 5 கைதிகளும் இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.  இது தவிர 2 சிறை அதிகாரிகளும் பலியாகினர்.  இந்த சம்பவத்தில் சமியாவுக்கு நேரடி தொடர்புள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.  இந்நிலையில், சமியா போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகி உள்ளார்.

Next Story