அனைத்து பிரச்சினைகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜோ பிடன் எடுத்து வருகிறார் டொனால்டு டிரம்ப்


அனைத்து பிரச்சினைகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜோ பிடன் எடுத்து வருகிறார் டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 29 Aug 2020 4:56 AM GMT (Updated: 29 Aug 2020 4:56 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

வாஷிங்டன்

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இந்த தேர்தல்தான் முக்கியத் தேர்தலாக இருக்கப் போகிறது. அனைத்து பிரச்சினைகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜோ பிடன் எடுத்து வருகிறார்.

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உயிரிழப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் மிக அதிக சோதனைகளைச் செய்து வருகிறது என கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக டிரம்பின் குழுவினர் அறிவித்துள்ளனர். அமெரிக்காவை மீண்டும் வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றுவது, டிரம்ப் கறுப்பினத்தவருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உடைப்பது, சட்டம் ஒழுங்கை கட்டிக் காத்தது என்ற பிரச்சாரங்களை முன்னெடுக்க குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனை கடுமையாக தாக்குவது, யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாமல் இருப்பவர்களின் வாக்குகளை கவருவது என வியூகம் வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது என டிரம்ப் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Next Story