ராணுவத்துக்கு எதிராக பேசிய பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த கொடுமை; பாகிஸ்தானில் சம்பவம்


ராணுவத்துக்கு எதிராக பேசிய பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த கொடுமை; பாகிஸ்தானில் சம்பவம்
x
தினத்தந்தி 30 Aug 2020 4:02 PM GMT (Updated: 30 Aug 2020 4:02 PM GMT)

பாகிஸ்தானில் ராணுவத்துக்கு எதிராக பேசிய பெண் வழக்கறிஞர் கடத்தப்பட்டு பல நாட்களாக கொடுமைக்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. எனப்படும் உளவு அமைப்பு ஆகியவை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் உள்பட மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

அந்நாட்டில் இருந்து தப்பி சென்ற பல்வேறு ஆர்வலர்களும், பலர் காணாமல் போவதற்கும், படுகொலைகளுக்கும் மற்றும் பிற குற்றங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவமே பொறுப்பு என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் தனது மண்ணில் பயங்கரவாதத்தினை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதில், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த அவர்களை அனுமதிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகிறது.

அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக விமர்சனம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக மன்சூர் பாஷ்டீன் என்ற பாஷ்துன் மனித உரிமைகள் ஆர்வலர் சிறையில் அடைக்கப்பட்டது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்த சூழலில் அந்நாட்டின் மனித உரிமைகள் ஆர்வலர் ஆரிப் ஆஜாக்கியா வெளியிட்ட வீடியோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.  அந்த நாட்டின் பெண் வழக்கறிஞர் ஒருவர், எதிரி என ராணுவத்துக்கு எதிராக பேசியுள்ளார்.

இதன்பின் கடந்த 14ந்தேதி 4 மர்ம நபர்களால் அந்த பெண் வழக்கறிஞர் கடத்தப்பட்டார்.  பல நாட்கள் கொடுமைக்கு பின்னர் பஞ்சாப் மாகாணத்தின் மைல்சி நகரில் தோடா சாலையருகே வயல்வெளியில் அரை மயக்கத்தில் அவர் கிடந்துள்ளார்.

அவரது கைகளும், கால்களும் கட்டப்பட்டு இருந்தன.  வாயில் துணியால் மூடியுள்ளனர்.  அதனால் பேச முடியாத நிலையில் இருந்த அவரிடம், உள்ளூர்வாசிகள் விசாரித்துள்ளனர்.  6 குழந்தைகளுக்கு தாயான அவர் திபல்பூர் பகுதியை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.

அவரை 4 பேர் கடத்தி, கொடுமை செய்து பின்னர் வயல்வெளியில் தூக்கி எறிந்து விட்டு சென்றனர் என கூறியுள்ளார்.  பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அவரத மகன் அளித்த புகாரை தொடர்ந்து, கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் விமர்சனத்திற்கு உள்ளாகும்பொழுது, அந்நாட்டு மக்கள் எப்படிப்பட்ட தொடர் விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதற்கு இந்த பெண் வழக்கறிஞரின் நிலை ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

Next Story