தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை: ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க சபை நியமனம் - அதிபர் அஷ்ரப் கனி நடவடிக்கை


தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை: ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க சபை நியமனம் - அதிபர் அஷ்ரப் கனி நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2020 12:18 AM GMT (Updated: 31 Aug 2020 12:18 AM GMT)

தலீபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதை முடிவு செய்யும் தேசிய நல்லிணக்க சபை ஒன்றை அதிபர் அஷ்ரப் கனி நியமித்தார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா, முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர தலீபான் பயங்கரவாதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் மற்றும் முக்கிய முன்னேற்றமாக இது பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகளுடன் ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 21 பேர் கொண்ட ஒரு குழுவை அதிபர் அஷ்ரப் கனி மார்ச் மாதம் அமைத்தார்.

ஆனாலும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் தலீபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதை முடிவு செய்யும் தேசிய நல்லிணக்க சபை ஒன்றை அதிபர் அஷ்ரப் கனி நேற்று முன்தினம் நியமித்தார்.

21 பேர் கொண்ட குழுவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்கிற இறுதியான முடிவை இந்த சபை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த தேசிய நல்லிணக்க சபையின் தலைவராக கடந்த அதிபர் தேர்தலில் அஸ்ரப் கனியின் முக்கிய போட்டியாளராகவும், தற்போதைய அரசில் முக்கிய நபராகவும் விளங்கும் அப்துல்லா அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Next Story