வரலாற்று நிகழ்வு இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை தொடங்கியது


வரலாற்று நிகழ்வு இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 31 Aug 2020 10:45 PM GMT (Updated: 31 Aug 2020 7:37 PM GMT)

வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை நேற்று தொடங்கியது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13-ந்தேதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.

இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

இதன் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்ய முடியும். மேலும் இது விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான கதவுகளை திறந்து உள்ளது.

அந்த வகையில் வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை நேற்று தொடங்கியது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு இஸ்ரேல் அரசின் எல் ஆல் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜெரட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பயணம் செய்கின்றனர்.

இந்த விமானம் சவுதி அரேபியாவின் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Next Story