உலக செய்திகள்

போர்ட்லேண்ட் துப்பாக்கிச்சூடு: டிரம்ப்-ஜோ பைடன் பரஸ்பர குற்றச்சாட்டு + "||" + Biden fights back, accusing Trump of fomenting US violence

போர்ட்லேண்ட் துப்பாக்கிச்சூடு: டிரம்ப்-ஜோ பைடன் பரஸ்பர குற்றச்சாட்டு

போர்ட்லேண்ட் துப்பாக்கிச்சூடு: டிரம்ப்-ஜோ பைடன் பரஸ்பர குற்றச்சாட்டு
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஜனாதிபதி டிரம்பும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தவரை போலீசார் கழுத்தை நெரித்து கொன்றதை கண்டித்து, ஒரேகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகரில் 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.


இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற அமைப்பின் சார்பில் நடந்து வரும் இந்த போராட்டத்தை ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

மேலும் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் விதமாக போராட்டம் நடைபெறும் மாகாணங்களுக்கு டிரம்ப் கூடுதல் மத்திய படைகளை அனுப்பி வருகிறார். ஆனால் ஒரேகான் மாகாணத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த டெட் வீலர் மேயராக இருப்பதால் அவர் மத்திய படைகளை குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

பரஸ்பர குற்றச்சாட்டு

அதேசமயம் அவர் போராட்டத்தை கைவிடும்படி மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை போர்ட்லேண்ட் நகரில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் பேரணியில் கலந்து கொண்ட டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் போர்ட்லேண்ட் வன்முறை தொடர்பாக ஜனாதிபதி டிரம்பும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடனும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வழிநடத்த விரும்பவில்லை

இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

போர்ட்லேண்ட் மக்கள் நமது பெரிய நாட்டின் மற்ற நகரங்கள் மற்றும் பகுதிகளைப் போலவே சட்டம் மற்றும் ஒழுங்கை விரும்புகிறார்கள். ஆனால் போர்ட்லேண்டை நிர்வகிக்கும் தீவிர இடதுசாரி ஜனநாயக மேயர் போலியான மேயராக செயல்படும் வரை அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. மேயருக்கான முட்டாள்தனத்துடன் போர்ட்லேண்ட் ஒருபோதும் மீளாது.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் ஜோ பைடன் தனது கட்சியின் மேயர்களை வழி நடத்த விரும்பவில்லை. மாறாக அவரும் அவரது கட்சியும் வன்முறையை விரும்புகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் போர்ட்லேண்ட் வன்முறை தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது:

டிரம்ப் பலவீனமானவர்

இடது அல்லது வலதுபுறமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் செய்யும் வன்முறையை நான் கண்டிக்கிறேன். டிரம்பும் அவ்வாறே செய்ய நான் சவால் விடுகிறேன். நாம் நம்முடன் போரிடும் நாடாக நமது நாடு மாறி விடக்கூடாது.

நமது சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவு ஆகியவற்றின் தீப்பிழம்புகளை தூண்டுவதற்கும் அச்சத்தின் அரசியலைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை தூண்டுவதற்கும் ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

போர்ட்லேண்ட் வன்முறை டிரம்பின் கண்காணிப்பின் கீழ் நடக்கிறது. இது டிரம்பின் அமெரிக்கா. டிரம்பின் அமெரிக்காவில் நாம் பாதுகாப்பாக இல்லை.

சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி டுவிட்டரில் பதிவு வெளியிடுவது அவரை பலப்படுத்துகிறது என்று டிரம்ப் நம்புகிறார். ஆனால் மோதலை தேடுவதை நிறுத்துமாறு தனது ஆதரவாளர்களை அவர் வலியுறுத்த தவறியது அவர் எவ்வளவு பலவீனமானவர் என்பதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.