நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- போரை தூண்டவில்லை சீனா உறுதி


நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- போரை தூண்டவில்லை சீனா உறுதி
x
தினத்தந்தி 1 Sep 2020 10:53 AM GMT (Updated: 1 Sep 2020 10:53 AM GMT)

நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை ; ஒருபோதும் எந்தப் போரையும் தூண்டவில்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்து உள்ளார்.

பீஜிங்

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை

கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.

லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.  பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது. 

ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா ராணுவம்  மறுத்து உள்ளது. நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது. 

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், சீனா ஒருபோதும் எந்தவொரு போரையும் மோதலையும் தூண்டவில்லை, சீன ராணுவம்  ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை.

சில தகவல்தொடர்பு சிக்கல்கள் இருந்திருக்கலாம். இரு நாடுகளும் தொடர்ந்து உறவுகளில் நல்லெண்ணத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும்.

இரு தரப்பினரும் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் நல்லெண்ணம் இருக்க வேண்டும்.  எல்லையில் அமைதியைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தியத் தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங், இந்திய வீரர்கள் எல்லையை  கடந்து,சீன பிராந்தியத்தில் அமைதியை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியதை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

Next Story