உலக செய்திகள்

3-ம் கட்ட சோதனையை எட்டுவதால் அமெரிக்காவில் தேர்தலுக்குள் தடுப்பூசி? + "||" + Vaccination before the election in the United States by reaching the 3rd phase of testing?

3-ம் கட்ட சோதனையை எட்டுவதால் அமெரிக்காவில் தேர்தலுக்குள் தடுப்பூசி?

3-ம் கட்ட சோதனையை எட்டுவதால் அமெரிக்காவில் தேர்தலுக்குள் தடுப்பூசி?
அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட்டால், அது தனக்கு ஓட்டுகளை அள்ளித்தரும் என தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நம்புகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா உருவாக்கியுள்ள தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-ம் கட்ட சோதனையை எட்டியுள்ளதாக அறிவித்தார்.


இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த தடுப்பூசி, மற்றொரு குழு தடுப்பூசிகளுடன் இணைகிறது. அவை முடிவுக்கு நெருக்கமாக உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என குறிப்பிட்டார்.

“யாரும் சாத்தியம் இல்லை என நினைத்த விஷயங்களை நாம் செய்கிறோம். சில சந்தர்ப்பங்களில் வருடக்கணக்கில் நடக்கும் செயல்முறைகளை நாம் சில மாதங்களில் செய்து இருக்கிறோம்” என்றும் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்காவில் தடுப்பூசிக்கு ஒப்புதலை வழங்கக்கூடிய அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-ம் கட்ட சோதனை முடிவதற்கு முன்பே கூட அவசர கால பயன்பாட்டை அனுமதிக்க தயாராக இருக்கிறோம் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இது அரசியல் முடிவு அல்ல. அறிவியல், மருந்து, தரவு அடிப்படையிலான முடிவுதான்” எனவும் குறிப்பிட்டார்.எனவே அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்படுகிறது.