கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் 7 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலி


கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் 7 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலி
x
தினத்தந்தி 4 Sep 2020 3:25 PM GMT (Updated: 4 Sep 2020 3:25 PM GMT)

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பணி பாதுகாப்பில்லா சூழலால் கொரோனா பாதிப்புகளில் சிக்கி 7 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலியாகி உள்ளனர்.

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் துணிச்சலுடன் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களின் சேவை பாராட்டுக்குரியது.  எனினும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள், உடைகள் உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்களது வாழ்வு பாதிக்கப்படும் நிலையும், அவர்களில் பலர் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்பட்டு உள்ளது.  இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் அம்னெஸ்டி சர்வதேச அமைப்பு, கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சுகாதார பணியாளர்களின் நிலை பற்றி ஆய்வு மேற்கொண்டது.

இதுபற்றி அந்த அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக நீதி தலைவர் ஸ்டீவ் காக்பர்ன் கூறும்பொழுது, ஒவ்வொரு சுகாதார பணியாளருக்கும் பணி பாதுகாப்புக்கான உரிமை உள்ளது.

மெக்சிகோ, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்றுகள் பாதித்து பல மாதங்களாகியும், சுகாதார பணியாளர்கள் அதிக விகிதங்களில் உயிரிழக்கும் சூழல் காணப்படுகிறது.  தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் தொற்று விரைவாக பரவி வருவது உடனடி நடவடிக்கை தேவை என்பதனையே காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, மெக்சிகோ நாட்டில் 1,320 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து, அமெரிக்கா (1,077), இங்கிலாந்து (649), பிரேசில் (634), ரஷ்யா (631) மற்றும் இந்தியா (573) ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் காணப்படுகின்றன.  இதுதவிர லத்தீன் அமெரிக்க நாட்டில் 97,632 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா, பிரேசில் மற்றும் தென்ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் போதிய இடவசதி இல்லாத பணி சூழல் ஆகியவை காணப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.

Next Story