ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷியா, ஈரான் சதி திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு


ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷியா, ஈரான் சதி திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Sep 2020 11:58 PM GMT (Updated: 5 Sep 2020 11:58 PM GMT)

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டத்தை கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலை சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சீர்குலைக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தல் குறித்து உளவுத்துறை தெளிவுபடுத்தி இருப்பது என்னவென்றால் தேர்தலில் சீனாவின் தலையீடு இருக்கும்; அது அமெரிக்காவை அரசியல் ரீதியாகப் பாதிக்கும் மிகப்பெரிய திட்டத்தை கொண்டுள்ளது; என்பதாகும். ஆனால் சீனா மட்டுமல்ல ஈரான், ரஷியா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த 3 நாடுகளும் நமது தேர்தலை சீர்குலைக்க முயலும் விரோதி நாடுகள் ஆகும்.

அவர்களில் சிலர் ஜோ பைடனை விரும்புகிறார்கள். சிலர் ஜனாதிபதியை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அந்த நாடுகள் எதை விரும்புகின்றன என்பது முக்கியமல்ல. அமெரிக்காவின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் தலையிட முயற்சிக்கும் எந்த ஒரு நாடும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்க தேர்தல்களில் தலையிட முயற்சிக்கும் எவரும் அசாதாரண விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனர்கள், ரஷியர்கள், ஈரானியர்கள் மற்றும் பிறருக்கு நாங்கள் வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளோம்.

எங்கள் தேர்தலின் புனிதத்தை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப்போகிறோம். அதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். அதுவே எங்களை அமெரிக்கா ஆக்குகிறது. எங்கள் தேர்தலில் தலையிட முயற்சிக்கும் மற்ற நாடுகளை நாங்கள் பொறுத்து கொள்ளபோவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story