கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று அல்ல- உலக சுகாதார அமைப்பு


கொரோனா வைரஸ்  உலகின் கடைசி  பெருந்தொற்று அல்ல- உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 8 Sep 2020 5:23 AM GMT (Updated: 8 Sep 2020 5:37 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.  உலக அளவில் சுமார் 2.74 கோடி பேர் பெருந்தொற்று நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல.  பெருந்தொற்று நமது வாழ்வியலின் ஒரு அங்கம் என்பதை வரலாறு நமக்கு கற்று கொடுத்துள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பான சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.


Next Story