கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி
x
தினத்தந்தி 9 Sep 2020 11:15 PM GMT (Updated: 9 Sep 2020 10:58 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

நியூயார்க், 

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஐ.நா. உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் ரெனாடா டெசாலியன் தலைமையில் ஐ.நா. குழு ஒன்று இந்தியாவில் முகாமிட்டுள்ளது. அக்குழு தலைமையில் பல்வேறு ஐ.நா. அமைப்புகள், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு உதவி வருகின்றன.

தொற்று அறிகுறிகள் கொண்ட 80 லட்சம் பேரை கண்டறியும் பணிக்கு உலக சுகாதார அமைப்பு உதவியது. ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெப்), 22 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளது. அதன்மூலம், 65 கோடி குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர் காக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. குழு, தனிநபர் பாதுகாப்பு சாதனங்களையும் வினியோகித்து உள்ளது. ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பலன்கள் கிடைக்க ஐ.நா. மேம்பாட்டு திட்டம் உதவியது. ஒரு லட்சம் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும், 4 ஆயிரம் டன் ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டன.

5 ஆயிரத்து 300 தூய்மை பணியாளர்களுக்கு கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் பயிற்சி அளித்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ள பெண்களுக்கு உதவுவதற்கான கையேடு தயாரிக்க உதவி செய்துள்ளது.

மன அழுத்தத்தை போக்கும் பிரசாரத்தில் இந்திய அரசுக்கு உதவியது. ஆகஸ்டு மாதம் மட்டும், 17 கோடி சமூக ஊடக கணக்குகளில் இதை பிரசாரம் செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story