ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்


ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 9 Sep 2020 11:04 PM GMT (Updated: 9 Sep 2020 11:04 PM GMT)

ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்காமல் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அந்த நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை தலைநகர் காபூலில் துணை அதிபர் அம்ருல்லா சலே தனது இளைய மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக அவரின் காரின் முன்னும், பின்னும் பாதுகாவலர்களின் கார்கள் அணிவகுத்து சென்றன. காபூலில் உள்ள ஒரு கடை வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்குள்ள கடைகளில் தீ பற்றி எரிந்தது. இதில் துணை அதிபரின் காரும் அவரது பாதுகாவலர்களின் கார்களும் தீயில் சிக்கின.

எனினும் இந்த குண்டுவெடிப்பில் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே சமயம் அம்ருல்லா சலேவுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் பாதுகாவலர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குண்டுவெடிப்பை தொடர்ந்து துணை அதிபர் அம்ருல்லா சலே தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும் என்னுடன் இருந்த என் இளைய மகனும் நலமாக இருக்கிறோம். எனது முகத்திலும் கைகளிலும் லேசான தீக்காயங்கள் உள்ளன. இந்தத் தாக்குதல் பற்றி என்னிடம் இப்போது சரியான விபரங்கள் இல்லை. அதேசமயம் இந்த தாக்குதலில் தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலீபான் பயங்கரவாதிகளுக்கு இணையாக ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தலீபான் பயங்கரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story