ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து; 2 பேர் பலி


ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Sep 2020 11:36 PM GMT (Updated: 11 Sep 2020 11:36 PM GMT)

ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

அம்மான்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்கா நகரில் ராணுவ ஆயுத கிடங்குகள் உள்ளன. இந்த கிடங்குகளில் பயன்படுத்தப்படாத மோட்டார் குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது. ஆனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது.

ஆயுதக் கிடங்குகளை சுற்றி குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுபற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் சர்கா நகருக்கு அதிகாரிகள் சீல் வைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியதில் சுமார் 200 பேர் பலியானதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story