கத்தாரில் இன்று அமைதி பேச்சுவார்த்தை: ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலி


கத்தாரில் இன்று அமைதி பேச்சுவார்த்தை: ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலி
x
தினத்தந்தி 11 Sep 2020 11:45 PM GMT (Updated: 11 Sep 2020 11:45 PM GMT)

கத்தாரில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் பலனாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் அது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய மற்றும் ஒரு மைல்கல் நிகழ்வாக அமையும்.

இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறமிருந்தாலும் ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் சோதனைச் சாவடியை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

Next Story